சென்னை

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத் தலைவராக  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரனைத் தமிழக முதல்வர் நியமித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள 69% இட ஒதுக்கீட்டுக்காகத்  தமிழக அரசு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு  எடுக்க உள்ளதாக அறிவித்தது.   மேலும் பல்வேறு சாதிக்கட்சிகளும் அமைப்புக்களும் ஒதுக்கீடு கோரி குரல் எழுப்பி வருவதால் இந்த கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரனை தமிழக முதல்வர் நியமித்துள்ளார்.   கடந்த 2001 முதல் 2009 வரை குலசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி புரிந்துள்ளார்.  கடந்த மாதம் அவரை செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையில் மூன்று வருடங்களுக்குத் தலைவராகத் தமிழக அரசு நியமித்தது.

இந்த நியமனத்துக்குத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  தேவேந்திர குல வெள்ளாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் தங்களது இனத்தவர்களின் 40 ஆண்டு கால வேண்டுகோள் தற்போது நிறைவேறியதற்காகத் தமிழக முதல்வரை பாராட்டத்  திருநெல்வேலியில் ஒரு விழா நடத்த உள்ளதாகவும் கூறி உள்ளார்.