சென்னை:

சென்னையில் மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பான  ரூ. 4.5 கோடி மதிப்பிலான 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த மகாதேவன் என்பவர், மாநகராட்சியின் டெண்டர் விதிகளுக்கு எதிராக  தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சியின் நடைமுறை காரணமாக தகுதிவாய்ந்த ஒப்பந்த தாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடத்தப்பட இருக்கும் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டரை அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. இதையடுத்து, டெண்டருக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக, இன்றுமுதல் திறக்கப்பட இருந்த டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.