சென்னை உயர்நீதிமன்றம் : மூன்று வருடங்களுக்குப் பிறகு கிளம்பும் சர்ச்சைகள்

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணியின் வழக்குப் புறக்கணிப்பு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த 1862 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது.  தற்போதுள்ள கட்டிடம் கடந்த 1892 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.  உலகின்  மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றம் 107 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.   இந்த உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கடந்த 2004 ஆம் வருடம் தொடங்கப்பட்டது.

இந்த உயர்நீதிமன்றம் தமிழக உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்னும் கோரிக்கை கடந்த 2017 ஆம் வருடம் எழுப்பப்பட்டு அது ஒரு சர்ச்சையைக் கிளப்பியது.   அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித சர்ச்சைகலும் இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் தற்போதைய தலைமை நீதிபதியான விஜயா  ஜே தகில்ரமணி மேகாலயா நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதை எதிர்த்து தகில்ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அவரது ராஜினாமா இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  அத்துடன் அவர் தனது கீழ் உள்ள 75 வழக்கு  விசாரணைகளையும் நடத்த மறுத்துள்ளார்.   அவருக்கு ஆதரவாக சென்னை வழக்கறிஞர் சங்கம் போராட்டத்தில் இறங்கி உள்ளது.   சங்கத்தின் சார்பில் தகில்ரமணியிடம் ராஜினாமாவைத் திரும்ப பெற வேண்டும் எனவும் அவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அரசிடமும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜூரிகளில் ஒருவர், “தகில்ரமணி தனது ராஜினாமாவை  அளித்ததுடன் அதைப் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.  அப்படி இருக்க உச்சநீதிமன்றம் அல்லது குடியரசுத் தலைவர் இந்த ராஜினாமாவை ஏற்கவோ அல்லது மறுக்கவோ தேவை இல்லை.   சட்டப்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த உடன் அவர் தனது பணியில் இருந்து விலக்கப்படுகிறார்.   அவர் இந்த ராஜினாமா ஏற்கப்படும் வரை பணியில் தொடர்வதாகச் சொல்லி இருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவர் அல்லது உச்சநீதிமன்றம் இது குறித்து முடிவு எடுக்க முடியும்.

அவர்  தனது ராஜினாமாவைக் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனவே  அவரிடம் ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை வைப்பது தேவை இல்லை.   அந்த இடம் காலி என விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்.   மற்றொரு தலைமை நீதிபதி பணி அமர்த்தப்படும் வரையில் நீதிபதிகளில் மிகவும் மூத்தவர் அந்தப் பணியைத் தொடரவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன், “நீதிமன்ற புறக்கணிப்பு அல்லது நீதிபதிகள் விமர்சனம் ஆகியவை எந்த விதத்திலும் உரிமை மறுப்பு ஆகாது.  இதை சட்டமும் ஒப்புக் கொண்டுள்ளது.  நாட்டில் உள்ள ஐந்து மூத்த நீதிபதிகள் இது குறித்து  அளித்துள்ள கருத்துபடி ராஜினாமா கடிதம் அளித்தால் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது சரியான முடிவு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த. மோகன கிருஷ்ணன், “தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது வழக்கமான ஒன்று இல்லை.   அரசியலமைப்பின் படி அனைத்து உயர்நீதிமன்றமும் சமம் என்றாலும் பெரிய நீதிமன்றத்தில் பணி புரிபவரை அதைப்போல் மற்றொரு  பெரிய நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தால் இந்த பிரச்சினை கிளம்பி இருக்காது.  தற்போது ஒரு கல்லூரி முதல்வரைத் துவக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்வது போல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.