வடகலை தென்கலை மோதல் குறித்து போலீசில் புகார் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

காஞ்சிபுரம் தேவஸ்தானத்தில் வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார்கள் மோதல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் என வழங்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில்  உற்சவத்தின் போது பிரபந்தங்கள் படுவது வழக்கமாகும்.  இந்த பிரபந்தங்களைப் பாடும் ஐயங்கார் வகுப்பினரிடையே வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உண்டு.   இந்த பிரபந்தங்களை இரு பிரிவில் யார் பாடுவது என்பது குறித்து கடும் சர்ச்சை நிலவி வருகிறது.

இது குறித்து ஒவ்வொரு உற்சவத்தின் போதும் இந்த சர்ச்சை ஏற்பட்டு இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் இந்த சர்ச்சை கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.    இவர்களிடையே சமாதானத்தை உண்டாக்க காவல்துறை, இந்து அறநிலையத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் முடியாத சூழல் உண்டாகி வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பதியப்பட்ட மனுவின் விசாரணையின் போது நீதிமன்றம் தேவராஜ சாமி தேவஸ்தான அதிகாரிக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.   அந்த உத்தரவில் பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மோதல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.