சென்னை

நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் நீதிபதிகள், செங்கல்பட்டு மருத்துவமனை மரணங்களுக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர்.

அரசு சார்பில் சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆஜராகி ”மே 1, 2 ஆம் தேதிகளில் 220 டன் அக்சிஜன் தமிழ்நாடு வந்தது என்றும், மே 2ஆம் தேதி நடந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த 475 டன் ஆக்சிஜனை முறையாக ஒதுக்கவில்லை.  மேலும் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் 400 டன்னிலிருந்து 60 டன் ஆந்திரா தெலுங்கானாவிற்கு அனுப்பப்படுகிறது.

இதற்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மையத்தில் 150 டன் உற்பத்தி செய்யப்படும் சென்னை மற்றும் செங்கல்பட்டிற்கு முக்கிய பங்களிப்பைச் செய்து வந்தது.

தற்போது தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு அங்கிருந்து ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.   தினம் 475 டன் ஆக்சிஜன் தேவைப்படும் என மத்திய அரசே நிர்ணயித்துள்ள நிலையில் அதை அனுப்பாததால், அதை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  சமீபத்தில் செங்கல்பட்டில் மரணமடைந்த 13 பேரும் கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்களது மரணம் ஏற்படவில்லை” என விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், நோடல் அதிகாரியுமான உமாநாத் தமிழகம் தெலுங்கானாவை விட்டுவிட்டு நேற்று மத்திய அரசு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார். கையிருப்பு சிலிண்டர்கள் நாளை (வெள்ளி) வரை மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் என அச்சம் தெரிவித்தார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் மத்திய அரசு தரப்பில் ஆஜராகி, ”ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 25 டன் தெலுங்கானாவிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் உற்பத்தி நிலை ஒரு வாரத்தில் தெரியும். ஆக்சிஜன் ஒதுக்குவதில் எவ்வித குறைபாடும் இல்லை” என விளக்கம் அளித்தார்.

நீதிபதிகள் ஓரிரு நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் உள்ளதால் முறையாக ஒதுக்கீடு செய்வதை உறுதிப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். வட மாநிலங்களில் டி.ஆர்.டி.ஓ. ஆக்சிஜன் உற்பத்திக்கு விரைந்து செய்தது போலத் தென் மாநிலங்களுக்குச் செய்ய மத்திய அரசு அதிகாரத்திற்கு உட்பட்டுச் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  மேலும் தமிழகத்துக்கு ஆக்சிஜன் வழங்குவதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.