சென்னை

சென்னை நகரில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது  நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

பல தனியார் வர்த்தக நிறுவனங்கள் சென்னை நகரின் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகைகளை வைக்கின்றன  அத்துடன் மின்சார ஒயர்கள், சீரியல் லைட்டுகள், டியூப் லைட்டுகளும் மரங்களில்வைக்கபடுகின்றன.  இவற்றை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார்.    இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தேரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோரின் அமர்வில் இது விசாரிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் மரங்களின் மேல் இவ்வாறு விளம்பரப்ப்பலைகைகள், விளக்குகள் வைக்க ஆணி அடிக்கப்படுவதால் மரத்தின் வளர்ச்சி பாதிப்பு அடைவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.   அத்துடன் இது தொடர்பாகக் கடந்த 2018 ஆம் அண்டு மாநகராட்சியிடம் அளித்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.    இதற்குச் சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜன்ரான வழக்கறிஞர் மரங்களைச் சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப்  பதில் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு சென்னையில் மரங்களைச் சேதப்படுத்தி உள்ள தனியார் நிறுவனம் குறித்த விவரங்களை மனுதாரர் இன்னும் 6 வாரத்துக்குள் மாநகராட்சியிடம் வழங்க வேண்டுமென்றும்  அடுத்த 8 வாரங்களுக்குள் அந்த நிறுவனங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.