சென்னை

னமுற்றோர் ஒலிம்பிக் வீரர்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள பரிசுத் தொகையில் வித்தியாசம் உள்ளது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஊனமுற்றோர்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குத் தமிழக அரசு ரொக்கப் பரிசு வழங்கி வருகிறது.   இந்த பரிசுத் தொகையானது தங்கப் பதக்கம் பெற்றோருக்கு ரூ.50000,  வெள்ளிப் பதக்கம் பெற்றோருக்கு ரூ.30000 மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றோருக்கு ரூ.20000 என வழங்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சலஸ்  நகரில் நடந்த ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளில் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பழனி மாறன் என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றார்.  அதையொட்டி அவருக்கு ரூ.50000 மற்றும் ரூ.20000 ரொக்கப் பரிசுத் தொகை அவருக்குத் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

அவருடைய தாய் சந்தான லட்சுமி ஒரு ஏழைக் கூலித் தொழிலாளி ஆவார்.  அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், “எனது மகன் பழனி மாறனுக்குத் தமிழக அரசு ரூ. 50000 மற்றும் ரூ.20000 ரொக்கப் பரிசு வழங்கி உள்ளது.  ஆனால் இதைப் போல் தங்கப் பதக்கம் வென்ற வேறு சிலருக்கு லட்சம் மற்றும் கோடிக்கணக்கில் பரிசுகள் வழங்கபட்டுள்ளன.

மிகவும் ஏழ்மையில் உள்ள எனது மகன் தனது ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி உள்ளார்.  அவர் தனது விளையாட்டுத் திறனை வளர்க்க மிகவும் பாடுபட்டுள்ளார்.  அதனால் அவர் 2015 ஆம் ஆண்டு இந்த சாதனைகளைப் புரிந்துள்ளார்.  அவருக்கு மத்திய அரசு விசேஷ பரிசாக ரூ.6 லட்சம் வழங்கியது.  ஆனால் தமிழக அரசு ரூ.70000 மட்டுமே வழங்கி உள்ளது.

எனவே தமிழக அரசு அவருக்கு மேலும் பரிசுத் தொகை அத்துடன் அரசுப் பணி வழங்க வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்துள்ளேன்.  ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை.  கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த போட்டியில் உயரம் தாண்டுதலில் வென்ற மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு அளித்துள்ளது.  அத்துடன் 2017 ஆம் ஆண்டு ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் வென்ற் பாலு  பாண்டியனுக்கு அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி உள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அரசு அளித்த பதில் மனுவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுச் செயலர் சித்ரா, “மனுதாரர் குறிப்பிட்டுள்ள இரு விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.   அதே முறை அனைத்து வீரர்களுக்கும் பின்பற்றப்படுவது இல்லை.   அரசின் விதிகளின்படி மனுதாரரின் மகனுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.   மேற்கொண்டு பரிசு கேட்கவோ வேறு சலுகைகளைக் கேட்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரிக்கும் நீதிபதி கார்த்திகேயன், “அரசு ஊனமுற்றோருக்கு வழங்கும் பரிசுத் தொகையில் வித்தியாசம் உள்ளது ஏன்?  அரசு அளிக்கும் பரிசில் பாரபட்சம் ஏன் உள்ளது?  இது குறித்து உயர்நீதிமன்றத்துக்கு விளையாட்டுத் துறைச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.