சென்னை:

சென்னை உயர்நீதி மன்றத்தில் வரும் 30ந்தேதி செப்டம்பர்) குண்டுவெடிக்கும் என மர்ம கடிதம் வந்துள்ள நிலையில், நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு டில்லியில் இருந்து மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி போஸ்ட் செய்யப்பட்ட அந்த கடிதத்தில்,   “செப்., 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை எழுதியவர் பெயர் ஹதர்ஷன் சிங் நாக்பால் என்றும், தான் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும்  குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், தானும், தனது மகனும் சேர்ந்து இந்த குண்டுவெடிப்பை நடத்துவோம் என்றும், தான் ஓரிடத்தில் இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் பயணத்தில் இருப்பதாகவும், செல்போன் எண்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால், தன்னை தேட முயற்சிக்க வேண்டாம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கடிதம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளை உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்னை காவல்துறையினரும்,  மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.