சென்னை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள  நளினியின் பரோலை மீண்டும் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அன்று சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.   அந்த கொலை வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.   அவர்களில் ஒருவரான நளினி தனது மகள் திருமணத்தை முன்னிட்டு பரோலில் ஆறு மாதம் வெளி வர அனுமதி கோரி கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அரசு நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்னும் அறிவுறுத்தலுடன் அவருக்கு ஒரு மாதம்  பரோல் அளிக்கப்பட்டது.   கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி அன்று பரோலில் வெளி வந்த நளினி தனது பரோலை நீட்டிக்கச் சொல்லி மனு ஒன்றை அளித்தார்.  சென்னை உயர்நீதிமன்றம் அவரது பரோலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்தது.

தனது பரோலை மீண்டும் நீட்டிக்கக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.   தனது மகளின் திருமண வேலைகள் இன்னும் முடிவடையாததால்  இந்த மாதம் 15 ஆம் தேதியுடன் முடியும் தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நளினிக்கு 7 வாரம் பரோல் அளித்திருந்ததாகவும் அந்த பரோலை மீண்டும் நீட்டிக்க முடியாது எனவும் அறிவித்து அவர் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.  இதனால் நளினியின் பரோல் வரும் 15 ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.