சென்னை

மிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்குத் தேவையான நிதி இல்லை என்பதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை  தெரிவித்துள்ளது.

அரிய நோயான லைசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் என்னும் நோய் மரபுரீதியான வளர்சிதை மற்ற நோயாகும்.   இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் உடலில் சுரக்கும் அமிலங்களில் கழிவு ஏற்பட்டு முக்கிய பாகங்களில் தங்கி விடும்.   இதனால் இவர்களுக்கு எலும்பு, மூளை, நரம்பு மண்டலம், தோல் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்து இறக்க நேரிடும்.  இவ்வாறான 45 நோய்களில் 9 நோய்களுக்கு மட்டுமே மருந்து உள்ளது.

அரிய மருந்தான இவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளதால் ஏழைகளால் வாங்க முடியாத நிலை உண்டாகி மரணமடைய நேரிடுகிறது.  தற்போது தமிழகத்தில் 132 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை வழங்க மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏபி சாஹி, மற்றும் நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தியின் அமர்வு விசாரித்தது.  அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில் இந்த நோயாளிகளின் சிகிச்சைக்காக மத்திய அரசு ரூ.4.4 கோடியும்  தமிழக அரசு ரூ.5 கோடியும்  உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.  ஆனால் தமிழக அரசு போதிய நிதி வசதி இல்லை எனவும் மத்திய அரசு நிதி உதவியைத் தாமதப்படுத்தி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நிரந்தரமாகக் குணம் அளிக்காது எனவும் அவர்களுடைய ஆயுளைத் தள்ளி வைக்க மட்டுமே உதவும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.  இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி, “அரிய வகை நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான நிதியில் பற்றாக்குறை உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

எந்த ஒரு நோயையும் முழுமையாகக் குணப்படுத்த முடியாது என அரசு முடிவெடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.  ஒருவருடைய ஆயுள் எப்போது முடியும் என்பதை இந்த உலகத்தில் யாராலும் முன்கூட்டியே கூற முடியாது.  ஆகவே ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் நிரந்தரமாகக் குணம் அடைந்தாலும் அடையாவிட்டாலும் சிகிச்சை அளிக்கவேண்டியது அரசின் கடமையாகும்.  இதில் அரசின் எந்த ஒரு ஊகத்துக்கும் இடமில்லை” என தெரிவித்துள்ளார்.