மருந்துகள் ஆன்லைன் விற்பனைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை

ந்தியா முழுவதும் மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தற்போது அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் உள்ளிட்டவை மலிவான விலையில் ஆன்லைனில் கிடைப்பதால் பலரும் இவ்வாறு வாங்கி வருகின்றனர். மருந்துகளும் அதிகமாக விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மருந்துகளையும் தற்போது ஆன்லைனில் வாங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், “தற்போது நாட்டில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாது மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யபடுகின்றன.

இந்த ஆன்லைன் வர்த்தகம் மூலம் போலியான அல்லது காலாவதியான மற்றும் தரம் குறைந்த மருந்துகள் விற்கப்படலாம். அத்துடன் மருந்துகள் மற்றும் மருந்துக்கடை சட்டத்தின் படி மருந்துகளை ஆன்லைனில் விற்க கூடாது. இவ்வாறு விற்பனை செய்வதால் லட்சக்கணக்கான மருந்துக்கடை உரிமையாளர்கள் பாதிப்பு அடைகின்றனர்.

ஆன்லைன் மருத்துவ வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் எரும்பாலானவை வெளிநாடுகளில் உள்ளவை அந்நிறுவனங்கள் இந்திய நாட்டு சட்டத்தை பின்பற்றுவதில்லை. எனவே இந்த ஆன்லைன் மருந்து விற்பனைகளை தடை செய்ய வேண்டும். மேலும் அந்த தளங்களையும் முடக்க வேண்டும்” என் குறிப்பிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். அவர் நாடு முழுவதும் வரும் 9 ஆம் தேதிவ்ரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.