ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய அளிக்கப்பட்ட வழக்கு மனு விசாரணை வரும் செவ்வாய் அன்று நடக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் ஆன்லைன் மூலம் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்குப் பல இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.   இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்குப் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சூரிய பிரகாசம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களைத் தடை செய்யக் கோரி  மனு ஒன்றைச்  சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அளித்துள்ளார். அத்துடன் இந்த இணையங்களை நடத்துவோர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை இந்த பொதுநல மனுவின் மீது விசாரணை நடத்த உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.