ஐஐடி மாணவி பாத்திமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது.

சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா சில வாரங்களுக்கு முன்பு தமது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரை பேராசிரியர்கள் துன்புறுத்தியதால் இந்த முடிவை தேடிக் கொண்டார் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல் ஆணையாளர் ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

இந் நிலையில் மாணவி பாத்திமாவின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிடக் கோரி இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் போது, சிபிஐயில் பணியாற்றிய அதிகாரிகள் தற்போது மத்திய குற்றப்பிரிவில் உள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.