சென்னை: ஒரு கல்வியாண்டு முடிவதற்கு முன்பே இடைப்பட்ட காலத்தில் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருக்கிறார்.

மருத்துவ படிப்பு தொடர்பான நீட் தேர்வு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பி. வேல்முருகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

பணியின் போது போதிய திறமையின்றி மருத்துவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களை பணியிட மாற்றம் செய்யலாம். மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும் சிறந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட குறைவு. அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

புதியதாக பணியில் சேரும் ஒரு மருத்துவருக்கு வழங்கப்படும் 57 ஆயிரம் ஊதியத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த ஊதியம் ஒரு கல்லூரி பேராசிரியர் பெறுவார்.

அனைத்து தொழில்களில் பணியாற்றுபவர்களை மதிக்கிறேன். ஆனால், வேலை, அதன் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில், மருத்துவர் மற்றும் காவல்துறையினருக்கு சிறப்பான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றார்.