சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க முக கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 19 லட்சம் முக கவசங்கள் இருப்பில் உள்ளது,  பள்ளிகள் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமிநாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியது.

மேலும், போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முக கவசம் இருப்பை உறுதி செய்வது குறித்து வரும் 23ம் தேதிக்‍குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.