தேசிய கொடி வடிவில் கேக் வெட்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

தேசிய கொடி வடிவில் கேக் வெட்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் கடந்த 2013ல் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை மத நல்லிணக்க நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியை போன்று உருவாக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டதாக கூறி அந்த கேக்கை வெட்டிய அப்போதைய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை கமிஷனர் பிரவேஷ்குமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கோவை நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் மனுதாரர் புகார் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி பிரவேஷ்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிய கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.