பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை:

பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.   வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவரும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும். நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது.

மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது. இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரம் 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரேஷன் கார்டு  வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.1000 கொடுக்க என்ன காரணம் என்ன என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும், இது பொதுமக்களின் பணம், கட்சியின் நிதி இல்லை என்று அரசை சாடிய நீதிபதிகள், பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர். மேலும்  வறுமை கோட்டிற்கு கிழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

You may have missed