சென்னை,

வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் எம்.நடராஜன் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்பட்டது.

அப்போது அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக அவர் சிறை செல்வது உறுதியாக உள்ளது.

நேற்று சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி மீதான வழக்கில், அவர்களின்  தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சசிகலா கணவர் நடராஜனின் தண்டனையையும் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

கடந்த 1994 ம் ஆண்டு லெக்சஸ் எனும் வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த கார் இறக்குமதி  செய்ததன் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை வரி மோசடி செய்ததாக நடராஜன், பாஸ்கரன் உள்பட நான்கு பேர்மீது  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட் நீதிமன்றம், நடராஜன் உள்பட நால்வருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உள்பட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில் விசாரணை நீதிமன்றம் தங்களின் தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்காமல் சிறை தண்டனை விதித்துள்ளதாகவும், எனவே விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கார் இறக்குமதியில் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றியே செயல்பட்டதாகவும் வரி ஏய்ப்பு என்கின்ற தங்கள் தரப்பினர் மீதான குற்றச்சாட்டு தவறானது. எனவே விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை ரத்து செய்ய வேண்டும் மனுதரார்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிட்டனர்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய காரை, பயன்படுத்திய கார் என கூறி இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு நீதிபதி ஜெயசந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ஏற்கனவே அவர்களுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரியே என்று உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.