சென்னை: திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் உள்ள தர்பணாயேஸ்வரர் கோவில் சனி பரிகார ஸ்தலமாகும். குடிகொண்டு சனீஸ்வரன் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாள்கள் பூஜைகள் நடைபெறும்.  இதனால், சனிப்பெயர்ச்சியின்போது இங்கு நாடு முழுவதும் இருந்து லட்சகணக்கானோர் குவிவது வழக்கம்.

ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளுடன்  கோவிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில் நீராட அனுமதிப்பதில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கோவிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன். 48 நாட்கள் பூஜைக்கும் அனுமதி வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்,  சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி நான், புதுச்சேரி அரசு, காரைக்கால் கலெக்டர், கோவில் செயல் அலுவலர், துணைநிலை கவர்னர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 27-ம் தேதி மனு கொடுத்தேன். மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்துக்காக ஒரு நாளைக்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாள்கள் நடைபெறும் விழாவை நடத்தலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட கலெக்டர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை கவர்னர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை டிசம்பர் 24 நண்பகல் 12 மணிக்கு கூட்டி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.