சென்னை:

கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனை உச்சநீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதி மன்றம்  நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடஇந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கோவையில்  சேர்ந்த ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அவரின் இரண்டு குழந்தைகளான  முஸ்கான், ரித்திக் ஆகியோர்  கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி பள்ளிக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில்,  மோகன்ராஜ் என்கவுண்டர் செய்யப்பட, மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இந்த வழக்கில், கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி  , குற்றவாளி மனோகரனுக்கு மகிளா நீதிமன்றம் இரட்டை தூக்குதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன்படி டிசம்பவர் 2ந்தேதி மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மனோகரன் தரப்பில், தனக்கு ஆளுனரிடம் கருணை மனு அளிக்க அவகாசம் தரவில்லை, அதுவரை தனது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணையைத்தொடர்ந்து, மனோகரனின்  தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தர விட்ட உயர்நீதி மன்றம், இதுகுறித்து 4 வாரங்களில் தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம், மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்திருந்த நிலையில், தற்போது உயர்நீதி மன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.