ஜெ.வின் வேதா இல்லம் கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம்: 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் குறித்து 6 வாரங்களில் பதிலளிக்குமாறு ஆளுநர் செயலாளர், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற்த்தில் ஜெ.தீபக் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதா காலமான பின்னர், தங்களை வாரிசுகளாக அறிவிக்க கோரி, தானும் தங்கை தீபாவும் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பூர்வ வாரிசுகளாக தாங்கள் இருக்கும் போது, உண்மை நிலை தெரிந்து கொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

அந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், அவசர சட்டத்துக்கு பதிலாக வேதா நிலையம் தொடர்பாக சட்ட முன்வடிவு சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், அரசின் நிலைப்பாட்டை தங்களுக்கு தெரிவிக்குமாறு கூறியதோடு, வழக்கு தொடர்பாக, தமிழக அரசு, மக்கள் தொடர்பு துறை செயலாளர், இயக்குநர் மற்றும் சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கார்ட்டூன் கேலரி