டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்! நீதிபதி

சென்னை: டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளர்.

தமிழக காவல்துறையில், சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பிரசாரத்தின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை  மேற்பாவையிட  அங்கு சென்றவர்,  மாவட்ட பெண் எஸ்பியிடம்  பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஜடி  4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து கேள்விப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்பிக்கே பாலியல் கொடுமையா?  என கோபமடைந்த நிலையில், இதுகுறித்து, சுமோட்டோ வழக்காக பதிவு செய்து இன்று விசாரணை நடத்தியது.

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால்,  சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதோடு, இந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது என கேட்டுக் கொண்டார். மேலும், விசாரைணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றவர், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.