Random image

உயர்நீதி மன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைப்பது குறித்து ஆலோசனை

சென்னை:

மிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.  இதுதொடர்பான வழக்கில், தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, இன்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில்,  நீர் நிலைகள் மற்றும் நீர் வழிகளை பாதுகாப்பதற்கு சிறப்பு பிரிவை அமைப்பது குறித்து தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  நீர் நிலைகள், நீர் வழித் தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்யவும், ஆக்கிரமிப்பு களை உடனடியாக அப்புறப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், இதற்காக குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மாதம் ஒரு முறை, தலைமை செயலர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

மேலும், , தமிழகம் முழுவதும், போலீஸ் உதவியுடன், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து முறையான உதவி வரவில்லை என்றால், ராணுவத்தினரின் உதவியை நாடலாம் என்ற உயர்நீதி மன்றம்,  ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அந்த பகுதியில்  மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று கூறியது.

நீர் நிலைகள், தண்ணீர் பாதைகள், ஆறுகள், கால்வாய், குளங்களில், எந்த ஆக்கிரமிப்பும், கட்டுமானமும் இல்லாததை, சிறப்பு பிரிவு உறுதி செய்ய வேண்டும், கடமை தவறிய அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும் உரிமை, அரசுக்கு உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அரசுக்கு, சிறப்பு பிரிவு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், நீர் நிலைகள் ,நீர் வழித்தடங்களை பாதுகாக்க சிறப்பு பிரிவு அமைப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணிப் துறை, வருவாய் துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். குழு அமைக்கப்பட்டது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.