சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய ஆய்வறிக்கையை அளிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

மலைப் பிரதேச நகரங்களான கொடைக்கானல், ஊட்டி மற்றும் குன்னூரில் சட்ட விரோதமாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.   இந்த கட்டிடங்களுக்கு முறையான ஆய்வு செய்யப்படாமலே நகராட்சி மற்றும் இதர துறையினர் அனுமதி வழங்கியதாக பல புகார்கள் எழுந்துள்ளன.  இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய பென்ச் விசாரித்து வருகிறது.

இந்த அமர்வில் இன்று கொடைக்கானல் நகராட்சி, நகர பிளானிங்க் கமிஷனர் ஆகியோருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதில், “உடனடியாக கொடைக்கானலில் கட்டப்பட்டுள்ள அனைத்து பெரிய கட்டிடங்கள், ஓட்டல்கள், மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவைகள், விதிகளில் அனுமதித்தபடி முறையாக கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.  தவிர அனுமதி முறையான பரிசோதனைக்குப் பின் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கொடைக்கானலை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரின் மனுவை நீதி மன்றம் பரிசீலனை செய்தது.  அதில் ஜின்னா தனது கட்டிடத்துக்கு அனுமதி பெற்ற பின்பும் நகராட்சி பூட்டி சீல் வைத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.   அந்த மனுவை நிராகரித்த நீதி மன்றம்  அந்த கட்டிடத்துக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய நகராட்சிக்கு ஆணை பிறப்பித்தது.

மலை நகரங்களான கொடைக்கானல், ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் இவ்வாறு விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதால், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற நேரங்களில் கட்டிடங்கள் இடிந்து பல உயிர்களுக்கு அபாயம் ஏற்படுத்தும் எனவும் நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.