சின்னதம்பி குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

ருக்குள் புகுந்துள்ள சின்னதம்பி காட்டு  யானையின் நடமாட்டம் குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “கோவை மாவட்ட வனப்பகுதியிலிருந்து யானைகள் ஊருக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வனத்துறையினரைத் திணறடிக்கும் சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைய, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கற் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகைதான் காரணம். யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகள் அமைந்துள்ளதால் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அதனால், சின்னதம்பி யானையை முகாமில் விட வேண்டும்” என  தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, கேரள வயநாடு தொடங்கி தமிழக எல்லை பகுதியான கோவை மாவட்டம் தடாகம் வழியாக சத்திய மங்கலம் வழியாக கர்நாடகம் வரை வலசை எனப்படும் யானை வழித்தடங்கள் இருந்தன. தற்போது அந்த பகுதிகள் அனைத்தும், ரிசார்ட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதுபோன்ற காரணங்களால்தான் சின்னத்தம்பி போன்ற காட்டு விலங்குகள் வழிதவறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன என்று கூறினார்.

இதைடுத்து, இதுகுறித்த தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும், சின்னதம்பி யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 11ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையில், காட்டு யானையான  சின்னதம்பி கடந்த 6 நாட்களாக உடுமலை பகுதியில் முகாமிட்டுள்ளதால், தங்களது விவசாயப்பணிகள் பாதிக்கப்படுவதுமல்லாமல், தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள், சின்னதம்பியை அங்கிருந்து அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருபுறம் சேவ் சின்னத்தம்பி என்றும், மற்றொரு புறம் சின்னத்தம்பியை அப்புறப்படுத்துங்கள் என்றும் கோஷம் எழுப்பி வருவதால்,என்ன செய்வதென்று தெரியாமல் வனத்துறையினர் திண்டாடி வருகின்றனர்.

சின்னதம்பி குறித்து விரிவான அறிக்கை தாக்க செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு