ஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகின்றன.  இதில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும், ஆன்லைன் ஆபாச விளம்பரங்கள் இடையிடையே வருவதாகவும், இதனால் மாணவர்களின் ஒழுக்கம் கெடுவதாகவும்  சிலர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து.  ஆன்லைன் வகுப்புகள் எதிராக சரண்யா, பரமேஸ்வரன் என்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை  உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் எற்கனவே விசாரணை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில்,  காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், ஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மேலும், ஆன்லைன் வகுப்புகளை  மாவட்ட அளவில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும்,  ஆன்லைன் வகுப்பு தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறை களை பின்பற்ற வேண்டும்,  வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்,  ஆன்லைன் வகுப்புகளுக்கு, வகுப்புகள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.