சென்னை:

மிழகத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.  இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று  பரவல் தீவிரமடைந்திருப்பதால், பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளன.

ஆனால், ஏழை மக்கள் இந்த வசதியை பெற முடியாத நிலை உள்ளது. இதனால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என   சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச விளம்பரங்கள் வருவதாகக் கூறி, இரண்டு பிள்ளைகளின் தாய் சரண்யா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் வாதிட்ட தமிழகஅரசு வழக்கறிஞர், தமிழகத்தில் மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுகிறது, அதன்மூலம் கல்வி போதிக்கப்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து கேள்வி  எழுப்பிய நீதிபதிகள்,  பாதுகாப்பான ஆன்லைன் கல்வியை வழங்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து ஜூன் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கொரோனா தொற்றால் அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளதால், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடை விதிக்க முடியாது என்றும்  உத்தரவிட்டனர்.