சென்னை:

ணவக்கொலை வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று உடுமலைப்பேட்டை  கவுசல்யா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் , கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி , பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன் , மதன் என்ற மைக்கேல் , ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும் , தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் , மற்றொரு மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.   வழக்கிலிருந்து கவுசல்யா வின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை , கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து திருப்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,  வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட  கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும்,  மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை  உறுதி செய்தும்  உத்தரவிட்டு உள்ளது.

இந்த  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து உள்ள கவுசல்யா, இந்த தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றும்,  தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வேன். கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைத்தால் தான் சங்கருக்கான நீதி கிடைக்கும். தாய் அன்னலட்சுமிக்கும்  தண்டனை கிடைக்க போராடுவேன் எனது சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.