காப்பீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சென்னை: வாகன விபத்தில் சிக்குவோர் காப்பீடு வைத்திருக்கும்பட்சத்தில், இனிமேல் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை அப்படியே மொத்தமாக ‍ஒரே தவணையில் பெறமுடியாத வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விபத்துக்கான ஆயுள் காப்பீடு வைத்திருப்பவர்கள், வாகன விபத்தில் சிக்கினால் இதற்குமுன்னர் தங்களுக்கான தொகையை அப்படியே முழுமையான அளவில் ஒரே தவணையில் பெற்று வந்தார்கள். ஆனால், இனிமேல் அவர்களால் அப்படி பெற முடியாது.

உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின்படி, அவர்களுக்கான தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்படும். வங்கியிலிருந்து அவர்களுக்கு மாதாமாதம் தவணைத்தொகை வழங்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல், அந்த தொகையிலிருந்து கடன் வழங்குவதோ அல்லது அந்த தொகையை முழுவதுமாக எடுத்துக்கொள்வதோ இயலாத காரியம்.

கடந்த மார்ச் 5ம் தேதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டிய உயர்நீதிமன்றம், இந்தப் புதிய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர் முழுமையாக நன்மையடைய முடியும் மற்றும் பணம் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.