சிலை கடத்தல் வழக்கு: சிறப்பு அமர்வை அமைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

--

சென்னை:

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சிலை கடத்தல் வழக்களை விசாரணை நடத்தி வரும் தனி  நீதிபதி மகாதேவனுடன், நீதிபதி ஆதிகேசவலு கூடுதல் நீதிபதியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அமர்வு இனிமேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் என்று அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிலை கடத்தல் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார். அதன்பிறகு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் நீதிபதி மகாதேவன் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் பாதுகாப்பு குறித்தும் அதன் சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் கொண்ட குழு கடத்தப்பட்ட சில சிலைகளை மீட்டு மீண்டும் தமிழகக் கோயில்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் கோயில்களில் சரியான பாதுகாப்பு அறைகள் இல்லை என்றும் சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தேவையான சில வசதிகளைச் செய்துதர கோரியும் தமிழக அரசிடம் நீதிபதி மகாதேவன் அறிவுறுத்தியிருந்தார். அதற்கு சரியான பதிலளிக்காததால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு கொண்ட சிறப்பு அமர்வை அமைத்து உத்தரவிட்டார்.