சென்னை,

மிழகத்தில் மருத்துவ மேல்படிப்பில் அரசு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துஉள்ளது.

அரசு டாக்டர்கள் மருத்துவ மேற்படிப்பான எம்.டி படிப்பதற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

இதை கண்டித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனத்தையும், உடனே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் ஆவன செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப்படிப்பில் 50 சதவீதம் இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் தரமான மருத்துவம் கிடைப்பதற்கு காரணமான இந்த ஏற்பாட்டை தமிழக அரசு பாதுகாக்காதது கண்டிக்கத்தக்கது.

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதன் மூலமாகவோ, அல்லது தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டு முறை தொடரும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசர சட்டம் பிறப்பிக்க வைப்பதன் மூலமாகவோ 50 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு மீட்க வேண்டும்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 3 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக முன்தேதியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தி, அதற்கு சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால அனுமதியையும் பெற்றுள்ளன.

ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதை அரசு வக்கீல் எதிர்க்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஐகோர்ட்டின் இடைக்கால அனுமதிக்கு எதிராகவும் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்