10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு வரும் 21ம் தேதி முதல் தேர்வு நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, நாளை திட்டமிட்டப்படி தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.