வளர்மதிக்கு ஏன் குண்டாஸ்! அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி!

சென்னை,

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவரது தந்தை மதுரை உயர்நீதி மன்றம் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில, வரும் திங்கள்கிழமையன்று பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என சேலம் காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘புதுக்கோட்டை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என பொதுமக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதையடுத்து புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு ஜூலை 12-ம் தேதியன்று சேலம் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்மீது காவல்துறை குண்டாஸ் சட்டத்தை பாய்ச்சியது. இதற்கான உத்தரவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பிறப்பித்தார்.

இதைதொடர்ந்து வளர்மதி  சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்மதியின் சார்பில் வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, செங்கொடி, கேசவன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது,  அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையின்படி அவர் இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்; அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எந்த முகாந்திரமும் இல்லை’ என வளர்மதியின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும்,  வளர்மதியை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்’ என்றும் மாதையன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வளர்மதி குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் விசாரணைய வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம், ‘சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்’ எனவும் உத்தரவிட்டனர்.