சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்…..உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை:
சிலை கடத்தலை தடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை நீதிபதி மகாதேவன் தொடர்ந்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ஐஜி பொன்.மாணிக்கவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை நீதிபதி வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, யானை ராஜேந்திரன், நாகை கோனேரிராஜபுரம் கோயிலில் ஏராளமான சிலைகள் உள்ளன. இவற்றில், அன்னபூரணி சிலை மாயமாகியுள்ளது. த.ஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் செந்தலை கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பாதுகாப்பற்று உள்ளது. இந் சிலைகள் 70 வயது மூதாட்டி சுந்தராம்பாள் என்பவரது கட்டுப்பாட்டில் உள்ளது’’என்று தெரிவித்தார்.
அப்போது, மற்றொரு மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, “சிலை கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளபோதே சிலை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் மாயமாகியுள்ளன. மர வேலைப்பாடுகள் சிதைக்கப்படுவதும், பழங்கால பொருட்கள் திருடப்படுவதும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இமெயில் மூலம் பலமுறை இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்றார்.
பின்னர் நீதிபதி கூறுகையில், ‘‘வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சிலைகள் கடத்தப்படுவது நடைபெற்று வருவதாக எனக்கும் புகார்கள் வருகின்றன. அண்ணாமலையார் கோயிலில் பஞ்சலோக சிலை திருடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது. சிலை கடத்தல் தொடர்வது என்பது தமிழக அரசின் மோசமான, நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. இது தொடர்வதை நீதிமன்றம் கண்களை மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. சிலை திருட்டுகளை தடுக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்” என்றார்.