சென்னை: பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றம்!

சென்னையில் பெட்ரோல் விலை, வரலாறுகாணாத விலையேற்றமாக முதன்முறையாக ஒரு லிட்டர் 82 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல்  விலையும்  உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு  விற்கப்படுகிறது.

தற்போது தங்கத்தைப் போலவே  பெட்ரோல், டீசல் விலையும் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் அமல்படுத்தின.

இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் – விலை உயர்த்தப்படவில்லை.

ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததற்கும் சேர்த்து  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.80-ஐ எட்டியது. அதேபோல டீசலும் லிட்டருக்கு விலை ரூ.72-ஐ கடந்தது.

இந்த விலை உயர்வு பிறகு சற்று குறைந்தது.

ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரத்துவங்கியிருக்கிறது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை   வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது.

சென்னையில் பெட்ரோல் விலை தேதி வாரியாக வருமாறு:-

ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.80.69, 25-ந் தேதி ரூ.80.70, 26-ந் தேதி ரூ.80.80, 27-ந் தேதி 80.94, 28-ந் தேதி ரூ.81.09, 29-ந் தேதி ரூ.81.22, 30-ந் தேதி ரூ.81.35, 31-ந் தேதி ரூ.81.58, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.81.77 2-ந் தேதி ரூ.81.92

10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 உயர்ந்து உள்ளது.

சென்னையில் கடந்த 10 நாட்களாக டீசல் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வந்து உள்ளது. இதன் நிலவரம் வருமாறு:-

ஆகஸ்டு 24-ந் தேதி ரூ.73.08, 25-ந் தேதி ரூ.73.09, 26-ந் தேதி ரூ.73.23, 27-ந் தேதி 73.38, 28-ந் தேதி ரூ.73.54, 29-ந் தேதி ரூ.73.69, 30-ந் தேதி ரூ.73.88, 31-ந் தேதி ரூ.74.18, செப்டம்பர் 1-ந் தேதி ரூ.74.42, 2-ந் தேதி ரூ.74.77.

10 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.69 அதிகரித்து உள்ளது.

பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 92 காசுக்கு விற்ற நிலையில், இன்று 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளாக விலை அதிகரித்துள்ளது. அதேபோல் 74 ரூபாய் 77 காசுகளாக விற்கப்பட்ட டீசல் இன்று 42 காசுகள்  அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48, டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 உற்பத்தி வரியாக மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. இதே போன்று தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது.

தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.