சென்னை: மாடுகளை  வழிமறித்த இந்து மக்கள் கட்சியினர்

சென்னை:

சென்னையில், மாடுகளை  கொல்வதற்காக  எடுத்து செல்வதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் வண்டியை வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூரில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான மாடுகள், பொது இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. இவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி புதுப்பேட்டை மாநகராட்சிக்கு பராமரிப்பு கூடத்துக்குக் கொண்டு சென்றனர்.

மாடுகளை மீட்பதற்காக சென்ற பூபாலன், 8 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி அவற்றை லாரியில் ஏற்றி, ஆலந்தூரில் உள்ள தனது வீட்டுக்குக் கொண்டு சென்றார்.

அப்போது, தேனாம்பேட்டை பகுதியில், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ரவிக்குமார் தலைமையில் சிலர் அந்த லாரியை வழிமறித்து நிறுத்தினர்.  மாடுகளை, அடிமாட்டுக் கொண்டு செல்வதாக கூறி, போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

மாடுகளின் உரிமையாளர், தனது மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துவைத்திருந்ததால் 8000 ரூபாய் பணம் செலுத்தி அவற்றை மீட்டு வீட்டுக்கு கொண்டு செல்வதாக கூறினர்.

பணம் செலுத்துவதற்கான ரசீதை ரவிக்குமார் கேட்டார். அவர்களோ ரசீது தரவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மாடுகளை வெட்டிக்கொல்லத்தான் எடுத்துச் செல்கிறீர்கள் என்று கூறி ரவிக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு காவலர்கள் சிலர் வந்து விசாரித்தனர்.

ராம. ரவிக்குமார்

பிறகு மாட்டு உரிமையாளர், சென்று சில ஆவணங்களைக் கொண்டுவந்தார். அதன்பிறகு மாடுகள் ஏற்றிவந்த லாரியை செல்ல ரவிக்குமார் உள்ளிட்டோர் அனுமதித்தனர்.

இது குறித்து ராம.ரவிக்குமாரை தொடர்புகொண்டு, “மாடுகளை கொல்வதற்காக எடுத்துச் செல்கிறார்கள்  என்று சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது தவறு அல்லவா” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “அவசர எண் 100-க்கு அரை மணி நேரமாக முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. ஆகவேதான் நாங்கள் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும் இதே கேள்வியைக் கேட்டனர். அவர்களிடமும் இதைத்தான் கூறினேன்” என்றார்.