கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை:
கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்ததால், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரத்தை தமிழக அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

சென்னனை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் மருத்துவமனை, ஒரு கொரோனா நோயாளிக்கு தனியார் மருத்துவமனையின் எந்த சிறப்பு மருந்துகளையும் வழங்காமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்ததாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் மருத்துவமனை, அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவித மருந்தும் ஒரு நோயாளிக்கு கொடுக்காமல், 19 நாட்களுக்கு, 12.20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

இந்த காரணங்களால் பி வெல் மருத்துவமனையின், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அங்கீகாரத்தை தமிழக அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக வசூல் செய்யும் எந்த தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஜூன் 5- ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி அற்ற அல்லது லேசான அறிகுறி உள்ள நோயாளிகளிடமிருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 7,500 ரூபாய் வசூலிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது. படுக்கை வசதி மற்றும் மருத்துவர்கள் கிடைப்பதைப் பொறுத்து ஏ1, ஏ2, ஏ3 மற்றும் ஏ4 என்று மருத்துவமனைகளை அரசு வகைப்படுத்தியுள்ளது.

ஏ1 மற்றும் ஏ2 மருத்துவமனைகள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 7,500 ரூபாய் வசூலிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏ3 மற்றும் ஏ4 மருத்துவமனைகளில் அறிகுறி அற்ற அல்லது லேசான அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு ரூபாய் 5000 வரை வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நான்கு பிரிவுகளிலும் ஐசியு சிகிச்சை தேவைப்படும், கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து, தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக 15,000 ரூபாய் வசூலிக்க அரசாங்கம் அனுமதித்தது.

ஆனால் பி வெல் மருத்துவமனை அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலித்துள்ளது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கும் எந்த மருத்துவமனையாக இருந்தாலும், உடனடியாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.