சென்னை:
சென்னையில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

கடந்த மாதம் 2-வது வாரம் வரை கொரோனா தாக்கம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தது. தினசரி பாதிப்பு 400 என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருந்தது.

இந்தநிலையில் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் முகக்கவசம் அணியாத காரணங்களால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்குள் 400-ல் இருந்து 5 ஆயிரத்தை கடக்கும் அளவுக்கு தினசரி பாதிப்பு அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு நெருக்கடி கடந்த ஆண்டை போல கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது.

தற்போது சென்னையில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசு கிண்டி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரு மருத்துவமனைகளிலும் அனைத்து படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளன.

அதுபோல ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றிலும் சுமார் 80 சதவீத படுக்கைகள் நிரம்பி விட்டன. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில் கடும் சவாலான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலானவற்றில் படுக்கைகள் நிரம்பி உள்ளன. பிரபல மருத்துவமனைகளில் தற்போது கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றொருபுறம் 2-ம் நிலை தனியார் மருத்துவமனைகளில் 90 சதவீத மருத்துவமனைகள் இந்த தடவை கொரோனா வார்டு அமைக்க முன்வரவில்லை. கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்த போது 2-ம் நிலை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

தற்போது அந்த நிலை ஏற்படவில்லை. இதன் காரணமாக தற்போது 2-வது அலையில் சிக்கும் கொரோனா நோயாளிகள் மிக எளிதாக மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த தடவை போல அரசும் நோயாளிகளை கண்டிப்பாக மருத்துவமனைகளில் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கவில்லை.

இத்தகைய காரணங்களால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே செல்போன், வாட்ஸ்-அப் மற்றும் இணைய தள வசதிகள் மூலம் டாக்டர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுதவிர வீடுகளிலேயே ஆவி பிடித்தல், வாய் கொப்பளித்தல் போன்ற சிகிச்சை முறைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள கொரோனா பாதிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்புக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.