சென்னை

கொரோனா சுகாதாரத்துறை பணியாளர்களுக்காகச் சென்னை ஐஐடி நானோ பாதுகாப்பு வடிகட்டிகளுடன் கூடிய முகக் கவசத்தை உருவாக்க உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.  சாதாரண முகக்கவசம் மூலம் கொரோனா பாதுகாப்பு முழுமையாகாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   கொரோனா வைரஸ் என்பது மிகச் சிறிய நுண்ணுயிர் என்பதால் இதற்குச் சிறப்பு முகக்கவசம் தேவைப்படுகிறது.

இதையொட்டி சென்னை ஐஐடி சிறப்பு முகக் கவசம் ஒன்றை அமைத்துள்ளது.   நானோ கோட்டட் ஃபில்டர் என அழைக்கப்படும் வடிகட்டிகளுடன் இந்த முகக் கவசம் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என ஐஐடி தெரிவித்துள்ளது.  இந்த முகக்கவசத்தை சென்னை ஐஐடியின் பேராசிரியர் அருள் பிரகாஷ் தலைமையில் உள்ள குழு வடிவமைத்துள்ளது

இது குறித்து அருள் பிரகாஷ், “இந்த முகக்கவசத்தில் உள்ள நானோ வடிகட்டி நைலானின் அடிப்படையில் உள்ள நூல் மூலம் மின்னணு நெசவு முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதில் உள்ள துளைகள் 1 மைக்ரோனுக்கும் குறைந்த விட்டம் கொண்டவை ஆகும்.  இதன் மூலம் மிகச் சிறிய நுண்ணுயிரியும் வடிகட்டப்படும்.

மேலும் இந்த நானோ வடிகட்டி கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மிகவும் அவசியமாகும்.  அவர்கள் கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் உள்ளதால் இவ்வகை முகக் கவசம் அவர்களைத் தொற்றில் இருந்து காக்கத் தேவைப்படுகிறது.   இந்த வகை வடிகட்டிகள் மீண்டும் சுத்தம செய்ய முடியும் என்பதால் இவற்றை அதிக நேரம் பயன்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.