டில்லி

ற்கொலை செய்துக் கொள்ளும் ஐஐடி மாணவர்கள் எண்ணிக்கையில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது எனத் தகவல் அறியும் சட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் மொத்தம் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன.    இந்த கல்வி நிலையங்களில் பணி புரியும் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.  கடந்த 2ஆம் தேதி ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2014-ம் ஆண்டுமுதல் 2019-ம் ஆண்டுவரை ஐஐடி கல்வி நிறுவனங்களில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் எனக் கேட்டிருந்தார்.

மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அளித்த பதிலில், “இந்தியாவில் உள்ள 10 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.

அதிகபட்சமாகச் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் 7 மாணவர்களும், அடுத்ததாக, காரக்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்தில் 5 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

டில்லி மற்றும் ஹைதராபாத் ஐஐடிக்க்களில் தலா 3 மாணவர்களும், மும்பை, கவுகாத்தி  மற்றும் , ரூர்கேலா ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா இரு மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

வாரணாசி ஐஐடி, தான்பாத், கான்பூர் ஐஐடி ஆகியவற்றில் இருந்து தலா ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளனர்”.எனத் தகவல் அளித்துள்ளது.  ஆயினும்  இந்த மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்த விளக்கத்தை அளிக்கவில்லை.

இந்தூர், பாட்னா, ஜோத்பூர், புவனேஷ்வர், காந்திநகர், ரோபர், மாண்டி, திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, கோவா, தார்வாட் ஆகிய ஐஐடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான தற்கொலைச் சம்பவங்களும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.