குடியுரிமை சட்ட போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம்

சென்னை

குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவரை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   நாடெங்கும் மாணவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.   அந்த போராட்டத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டெந்தல் என்பவர் பங்கு பெற்றார்.

போராட்டத்தின் போது ஜேக்கப் நாஜி ஜெர்மனியில் சித்திரவதை அனுபவித்ததைக் குறிக்கும் வகையில் ஒரு பதாகையை வைத்திருந்தார்.  இந்தப் படம் சமூக வலைத் தளங்களில் வைரலானது.    அதையொட்டி ஜேக்கப்பிடம் குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜேக்கப் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.  நேற்று ஜேக்கப் ஜெர்மனுக்குச் சென்று விட்டார்.

இது குறித்து ஜேக்கப் லிண்டெந்தல், ” குடியேற்றத்துறை அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தியபோது என்னுடைய அரசியல் சார்பு உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பினர். விசாரணையின் முடிவில் விசா விதிகளை மீறியதால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நான் சட்ட ரீதியான ஒரு போராட்டத்தில், அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் பங்கேற்றதாக விளக்கம் அளித்தேன். இந்த விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை.  நான்  இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான உத்தரவைத் தருமாறு கேட்டிருந்தேன். அவர்கள் தருவதாகக் கூறிவிட்டு எழுத்துப்பூர்வமான உத்தரவைக் கொடுக்கவில்லை. இதனையடுத்து ஜெர்மனிக்குத் திரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.