சென்னை

சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்துள்ளனர்.

உலகெங்கும் தற்போது காற்று மாசாவது அதிகரித்து வருகிறது.   அதில் இந்திய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.   இந்தியத் தலைநகர் டில்லி மற்றும் தமிழக தலைநகர் சென்னை ஆகிய நகரங்களும் பாதிக்கப்பட்ட நகரங்களில் அடங்கும்.  இதற்கு முக்கிய காரணம் வாகனப்புகையில் இருந்து வெளி வரும் கார்பன் டை ஆக்சைடு ஆகும்.    இதைக் குறைக்க மாற்று எரிபொருளைத் தயாரிக்க ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டானோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஹைடிரஜன் எரிபொருளைத் தயாரித்தனர்.  இந்த எரிபொருள் உற்பத்திச் செலவு குறைவாக இருந்தாலும் அது எளிதில் தீப்பற்றும் தன்மை உடையதாக உள்ளது.  எனவே அவற்றை வாகனத்தில் பொருத்துவதும் சேமித்து வைப்பதிலும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டது..  தற்போது இந்த எரிபொருளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் இந்த ஹைட்ரஜன் எரிபொருளை கடல் நீரில் இருந்து தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து சாதனை செய்துள்ளனர்.  இவ்வாறு கடல் நீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்தும் போது கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதில்லை. என்பதால் காற்று மாசு ஏற்படாது.   அத்துடன் இந்த எரிபொருளைத் தேவைப்படும் போது ,மட்டும் தயாரித்தால் சேமித்து வைக்கத் தேவை இருக்காது.

ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கக் கடல்நீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவை தேவையாக இருப்பதால் மூலப்பொருட்களின் செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.  இந்த எரிபொருள் வாகனங்களுக்கு மட்டுமின்றி ராக்கெட்டுக்களுக்கும் பயன்படுத்த ஆய்வுகள் நடந்து வருகின்றன எனச் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.