சென்னை

வெளிநாட்டுக் கல்வி குறித்த விசாரணை எழுப்புவதில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.

வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில்வதில் நாடெங்கும் உள்ள பல மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளது.  இது குறித்து ஆலோசனை அளிக்கப் பல நிறுவனங்கள் உள்ளன.   இந்த நிறுவனங்களை விசாரிப்பதன் மூலம் மாணவர்கள்  ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள கல்வி நிலையங்கள்,  கல்வி விவரங்கள்,  சேர்க்கைத் தகுதி, கட்டணம் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் அதிக அளவில் மாணவர்கள் விசாரித்துள்ளனர்.   இங்கு 8171 பேர் விசாரித்துள்ளனர்.  இரண்டாம் இடத்தில் 5013 பேருடன் சென்னையும், மூன்றாம் இடத்தில் 4694 பேர்களுடன் டில்லியும் உள்ளன.   மாநில வாரியான கணக்குப்படி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 7127 பேர் விசாரித்துள்ளனர்.

நாடெங்கும் கணக்கிடுகையில் கனடா நாட்டைப் பற்றி 19849 பேர், ஜெர்மனியைப் பற்றி 12979 பேர் மற்றும் அமெரிக்காவைப் பற்றி 11961 பேர் விசாரித்துள்ளனர்.  இதில்  பொறியியல், முதுநிலை வணிக நிர்வாகம், மருத்துவம், ஊடகத்துறை, ஓட்டல் நிர்வாகம், விமானம் செலுத்துதல் ஆகியவை குறித்து நிறைய மாணவர்கள் விசாரணை செய்துள்ளனர்.

மாநில ரீதியாக தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் அதிக அளவில் மாணவர்கள் விசாரித்துள்ளனர்.   இதில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் அதிகம் பேர் கனடா மற்றும் ஜெர்மனி குறித்தும் தெலுங்கானா மாநிலத்தில் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைக் குறித்தும் விசாரித்துள்ளனர்.