பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களில் சென்னையும் ஒன்று: காங். மூத்த தலைவர் சசிதரூர்

சென்னை:

லகில் பெண்களுக்கான பாதுகாப்பான இடங்களில் சென்னையும் ஒன்று என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கூறி உள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி இந்த ஆண்டு  சென்னையில் நடைபெறுகிறது.  இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் நடைபெறும்உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்பதற்காக  சுவிட் சர்லாந்து  நாட்டை சேர்ந்த அணி சென்னை வந்துள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபலமான நட்சத்திர ஆட்டக்காரரான அம்ரே அலின்கிஸ் சென்னை வந்துள்ள அணியில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கூறிய சுவிட்சர்லாந்து பயிற்சியாளர்,   “இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அம்ரே பெற்றோர் அவரை சென்னைக்கு அனுப்ப மறுத்துவிட்டதாக கூறினார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில்  வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த செய்தி குறித்து மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சுவிட்சர்லாந்து அணி பயிற்சியாளர் கூறியிருப்பது  முரணாக உள்ளது. உலகில் பெண்களுக்கான பாதுகாப்பான இடங்களில் சென்னையும் ஒன்று.  சொல்லப்போனால் சுவிட்சலாந்தைவிட சென்னை பாதுகாப்பானது.

ஆனால், உண்மையை விட பொய் வேகமாகப் பரவியுள்ளது. பெண்கள் மீதான இந்தியாவின் மதிப்பு குறித்த நம்பிக்கையை நாம் இந்த உலகில் மீட்டெடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பு அரசிடமிருந்து தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.