சென்னையில் அகற்றப்பட்ட ஜெ.சிலை தஞ்சையில் நிறுவப்பட்டதா?

ஞ்சையில் இன்று  திடீரென நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை, சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட சிலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின்  முழு உருவ வெண்கலச் சிலை, சென்னையில் உள்ள அக்கட்சி  தலைமையகத்தில்  வெண்கல சிலை அவரது 70வது பிறந்தநாளான கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். சிலையை வடிவமைத்த சிற்பிக்கு மோதிரமும் பரிசளிக்கப்பட்டது.

ஆனால், சிலை ஜெயலலிதா போலவே இல்லை என்று பலரும் விமர்சித்தனர். குறிப்பாக சமூகவலைதளங்களில் பலரும் இது குறித்து பதிவிட்டனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள்,  “இந்த சிலை அகற்றப்பட்டு வேறு புதிய சிலை வைக்கப்படும்” என்று கூறினர்.

அதன்படி ஜெயலலிதாவின் புதிய சிலை நிறுவப்பட்டது.

சென்னையில் அகற்றப்பட்ட சிலை

இந்த நிலையில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று இரவோடு இரவாக ஒரு ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டது. இன்று அந்த வழியில் சென்றவர்கள் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

இந்த சிலை குறித்து கேட்டபோது உள்ளூர் அதிமுகவினர் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்தனர். தஞ்சை மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம் எம்.பி.யை  patrikai.com  இதழ் சார்பாக தொடர்புகொண்டு கேட்டபோதும் இதையே கூறினார். மேலும் தான் பாராளுமன்ற கூட்டத்துக்காக டில்லி வந்திருப்பதாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போதும் இது குறித்து தகவல் தெரியாது என்ற பதிலே வந்தது. சிலைக்கான அனுமதி தஞ்சை மாநகராட்சியிடம் பெறப்பட்டதா என்று மாநகராட்சி அலுவலகத்தில் கேட்டபோதும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் ஏதும் தெரிந்திருக்கவி்லலை.

தஞ்சையில் நிறுவப்பட்டுள்ள சிலை

எந்தவித அனுமதியும் பெறாமல் ஆளுங்கட்சியினரே இப்படி சிலை வைக்கலாமா என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் வைக்கப்பட்டு உருவம் சரியில்லை அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலைதான் தஞ்சையில் நிறுவப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து  அதிமுக தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai Jayalalithaa statue removed Founded thanjavur, சென்னை  அ.தி.மு.க. தலைமையகம் ஜெயலலிதா சிலை அகற்றம் தஞ்சை சிலை அமைக்கப்பட்டது
-=-