சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ‘எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்’ என பெயர் மாற்றப்பட்டது

சென்னை:

சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர், முதல்வர் எடப்பாடி சமீபத்தில் அறிவித்தபடி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகை திறந்து வைக்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.  பேருந்து நிலையம் என மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவின் போது அறிவித்தார்.

சென்னையில் நந்தனம் ஓய்எம்சிஏ  பகுதியில் கடந்த மாதம் 31ந்தேதி நடைபெற்ற  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி,  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட மத்திய அரசை  வற்புறுத்தி வருவதாகவும், சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதுபோல,  ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணோளி காட்சி மூலம், கோயம் பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  பேருந்து நிலையம் என மாற்றப்பட்ட அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.