மழைநீர் சேகரிப்பு வைத்துள்ளவர்கள் தண்ணீர் பிரச்சினையில் இருந்து தப்பிப்பு!

--

சென்னை:

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாததாலும்,  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்த நிலையிலும், சமீபத்தில் பெய்த மழையை, தங்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மூலம் சேமித்தவர்கள் நல்ல பலன் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் வகையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2003 ஆம் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து பெரும்பாலான வீடுகள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தி வந்தனர். அதன்பிறகு சில ஆண்டுகள், அதை கவனிக்காத நிலையில்,  தற்போது  நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மழைநீர் சேகரிப்பு என சுலோகன் கேட்கத்தொடங்கி உள்ளது.

இதன்படி, கடந்த மாதங்களில் மழைநீர் சேகரிப்பை கட்டமைப்பை ஏற்படுத்திய பலர், சமீபத்தில் பெய்த சிறு சிறு மழைகளின் தண்ணீரை சேகரித்து நல்ல பலனை அடைந்துள்ளனர்.

மேலும், அரசு சார்பிலும், பல்வேறு காலி மனைப்பகுதிகளில் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு சமூக அமைப்புகளும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பை செய்து வருகிறது.

மேலும் தற்போது பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர் என்றும், இதுபோன்று அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டால் சென்னை தண்ணீர் பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.