நீட்: இந்தி தெரியாமல் இந்தியில் தேர்வெழுதி தேர்வான மருத்துவ கல்லூரி மாணவர் கைது

சென்னை:

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர்,  இந்தி தெரியாமல் இந்தியில் நீட் தேர்வெழுதி தேர்வான சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரம் வெளியானது. இதில் மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது மகன் உதித் சூர்யா கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த முறைகேடு மூலம் ஏராள மானோர் இடம்பிடித்துள்ளது தெரிய வந்தது.  இது தொடர்பாக சுமார் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலரை காவல்துறையினர் வெளி மாநிலங்களில் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் தனுஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரது விவரங்களை ஆய்வு செய்த போலீசார், தனுஷ்குமார் பீகாரில் நீட் தேர்வு எழுதியதும், அதுவும் இந்தியில் தேர்வு எழுதியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து  தனுஷ்குமாரை கைக்குள் கொண்டு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், தனுஷ்குமாருக்கு இந்தி பேசவோ, வாசிக்கவோ, எழுதவோ தெரியவில்லை என்பது உறுதியானது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில்,  பீகாரில் உள்ள நீட் தேர்வு மையத்தை தேர்வு செய்து ஆள் மாறாட்டம் செய்து,  இந்தி மொழியை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியதும்,  அதில் முதல் 50 இடங்களுக்குள் வெற்றி பெற்றதும்  தெரிய வந்தது..

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.