சென்னை:சென்னையில் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் 118 கிலோமீட்டர் தொலைவுக்கு, மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சிப்காட் ஆகிய 3 வழித் தடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. அவற்றில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையேயான பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந் நிலையில் இந்த திட்டத்தில் செயற்கை கோள் நகரமான திருமழிசையை இணைக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.  சென்னை மாநகரின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறி இருப்பதாவது: மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக டிபிஆர் எனப்படும் விரிவான திட்ட அறிக்கை 6 மாதத்தில் அரசிடம் தரப்பட உள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை அரசு செயல்படுத்திட முடிவு செய்யும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

242.70 கோடி ரூபாய் செலவில் 122.99 ஏக்கர் பரப்பளவில் திருமழிசை செயற்கை கோள் டவுன்ஷிப் திட்டத்தின் முதல் கட்டமாக தமிழக வீட்டுவசதி வாரியம் வீடுகள் கட்டி வருவதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.