சென்னை: செப்டம்பர் 7ந்தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து  மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பொதுப்போக்குவரத்து சேவை அனைத்தும் கடநத 5 மாதங்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரயில் போக்குவரத்து உள்ள அனைத்து பொதுப்போக்குவரத்துக்கும் மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.
இதனால், வரும் 7ந்தேதி முதல் சென்னையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் இயங்க உள்ள மெட்ரோ ரயிலுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அலுவலகம் இல்லாத நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், 7 ஆம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும் என்றும் 9 ஆம் தேதி முதல் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.